வெட்டிக்கொலை செய்யப்பட்ட அருண்குமார். 
க்ரைம்

லாலாபேட்டை அருகே இளைஞர் அரிவாளால் வெட்டி, கழுத்தறுத்துக் கொலை: 3 பேர் கைது, போலீஸ் குவிப்பு

ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே இளைஞர் அரிவாளால் வெட்டி, கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாதுகாப்புக்காக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஜோதிவேல் (33), அருண்குமார் (23). நந்தன்கோட்டையைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி (27), வினோத் (24). கீழசிந்தலவாடியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (23).

ஜோதிவேலும், அருண்குமாரும் நேற்று மதியம் மேட்டு மகாதானபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பெரியசாமி, வினோத், ஆனந்தன் ஆகியோரது இருசக்கர வாகனங்கள் சாலையில் நின்றிருந்துள்ளதைத் தட்டிக் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அருண்குமார் - பெரியசாமி இடையே செல்போனிலும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து அவர்களைச் சந்திப்பதற்காக ஜோதிவேல், அருண்குமார் நண்பர்களுடன் கீழசிந்தலவாடிக்கு நேற்றிரவு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பெரியசாமி, வினோத், ஆனந்தன் ஆகியோர் அருண்குமாரை ஆபாசமாகத் திட்டியதுடன், அருண்குமாரை வினோத், ஆனந்தன் ஆகியோர் பிடித்துக்கொள்ள பெரியசாமி அரிவாளால் அருண்குமார் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டி, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். மேலும் ஜோதிவேலையும் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி. ப.சுந்தரவடிவேல், குளித்தலை டிஎஸ்பி சக்திவேல், லாலாபேட் டை இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். லாலாபேட்டை போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அருண்குமார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து பெரியசாமி, வினோத், ஆனந்தன் ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் அரிவாளால் வெட்டி, கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதுகாப்புக்காக இப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT