மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.700 கோடி மதிப்பிலான ஹெராயின் பொட்டலங்கள்.

 
க்ரைம்

ரூ.700 கோடி மதிப்பிலான 71 கிலோ ஹெராயின் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த இருவர் சிக்கினர்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து திருச்சி வழியாகக் கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கடத்த இருந்த ரூ.700 கோடி மதிப்புள்ள 71.24 கிலோ ஹெராயினை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதி காரிகள் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா, ஹெராயின், மெத்தம் பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களின் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க தமிழக போலீஸார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

பிற மாநிலங்களில் இருந்து ரயில், பேருந்து மற்றும் சாலை வழியாகப் போதைப்பொருட்கள் தமிழகத்துக்குள் கடத்தி வரப்படுவதைத் தடுக்கவும், கடல் வழியாக நடைபெறும் கடத்தலைக்கட்டுப்படுத்தவும் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க அனைத்து மாவட்ட போலீஸாரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், போதைப்பொருள் நடமாட்டம் கண்டறியப்பட்டால் சம்பந்தப் பட்ட காவல் ஆய்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

ஐஸ்கிரீம் வண்டி

இந்நிலையில், சென்னையில் இருந்து கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு அதிகளவில் ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

குறிப்பாக, மாதவரம் பகுதியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, நடமாடும் ஐஸ்கிரீம் வாகனத்தைப் பயன்படுத்தி ஹெராயின் கடத்தப்படு வதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாதவரம் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலை அருகிலும், சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் வாகன சோதனை யைத் தீவிரப்படுத்தினர். சந்தேகத்துக்கிடமான ஐஸ்கிரீம் வாகனங்களையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

69 பொட்டலங்களில் ஹெராயின்

கடந்த செவ்வாய்க்கிழமை மாதவரம் ரவுண்டானா வழியாக வந்த நடமாடும் ஐஸ்கிரீம் வாகனம் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, வாகனத்துடன் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வாகனத்தைச் சோதனையிட்டனர். அப்போது, ஐஸ்கிரீம் வைக்கும் பகுதியில் மாவு போன்ற பொருள் 69 பொட்டலங்களாக அடுக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றைப் பிரித்துப் பரிசோதித்தபோது, அவை ஹெராயின் போதைப் பொருள் என்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மொத்தம் 71.24 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருளையும், அதைக் கடத்தப் பயன்படுத்திய ஐஸ்கிரீம் வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.700 கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து ரகசிய இடத் துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.இதில், கைது செய்யப்பட்டவர்கள் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷபியூக் அகமது (45), மாத்தூரைச் சேர்ந்த அப்துல் சுகூர் (39) என்பது தெரிய வந்தது.

முதற்கட்ட விசாரணையில் சென்னையைப் போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தி, திருச்சி வழியாக கடலோரப் பகுதிக்குச் சென்று, பின்னர் இலங்கைக்கு ஹெராயின் போதைப் பொருளைக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் சர்வதேச போதைப் பொருள் சந்தைக்கு அனுப்பப்பட இருந்த பெருமளவிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் பின்னணியில் யார்?

பறிமுதல் செய்யப்பட்ட ஹெரா யின் எங்கிருந்து வாங்கப்பட்டது? அதை இலங்கையில் யாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்த னர்? கடத்தலுக்குப் பின்னால் உள்ள முக்கியப் புள்ளிகள் யார்? கைது செய்யப்பட்ட இருவருக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? சென்னையில் மேலும் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினம் அருகே உள்ள கடலோர கிராமத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT