கோப்புப் படம்
ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்தல் பொருட்கள் வருவதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மன்னார் வளைகுடா, புத்தளம் மாவட்ட கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மன்னார் வளைகுடாவில் நடுக்கடலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 2 பைபர் படகுகள், இலங்கையைச் சேர்ந்த 2 பைபர் படகுகள் என மொத்தம் 4 படகுகளைச் சோதனை செய்தனர்.
படகுகளில் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2400 கிலோ பீடி இலைகள் கொண்ட 60 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. 4 படகுகளையும் பறிமுதல் செய்து தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 11 பேரை கடற்படையினர் கைது செய்து சிலாபம் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றனர்.
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், ரோஹித் ஆகியோருக்குச் சொந்தமான பைபர் படகுகளில் பீடி இலைகளைக் கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆனந்த், நிஷாந்த், சுகிர்தன், தினேஷ், மிக்கேல், ஞானி, சஞ்சய் ஆகியோரையும் இலங்கை புத்தளத்தைச் சேர்ந்த 4 பேரையும் கடற்படையினர் கைது செய்தனர்.