க்ரைம்

திருத்துறைப்பூண்டி அருகே கைத்துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் கார்களில் வந்த 7 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவாரூர்: கைத்துப்பாக்கி, பட்டாக்கத்திகளுடன் காரில் வலம் வந்த ரவுடிகள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 கார்களை மடக்கி சோதனை செய்தனர். அந்தக் கார்களில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த அம்மு என்ற பசுபதி (26), தூத்துக்குடி கண்ணன் (22), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தர் (22), கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஹரிஹரன் (33), திருத்துறைப்பூண்டி அருகே தெற்கு பாமணி ஹரிஷ் என்ற அன்புராஜ் (21), யோகேஷ் (21) திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை சிவபாலன் (26) ஆகிய 7 பேர் இருந்தனர். இதில் கண்ணன், பசுபதி, கமுதி தர், ஹரிஹரன் ஆகியோர் கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பட்டியலில் இருப்பவர்கள் என தெரியவந்தது.

ஒரு காரில் சோதனை செய்தபோது கைத்துப்பாக்கி, 2 தோட்டாக்கள், பட்டாக்கத்திகள் உள்ளிட்டவை இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆயுதங்கள் மற்றும் 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த 7 பேரையும் கைது செய்தனர். அவர்கள் எதற்காக இங்கு வந்தனர், ஏதேனும் சதித்திட்டம் தீட்டியிருந்தார்களா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT