கொலை செய்யப்பட்ட நவீன்
காரைக்குடி: காரைக்குடி அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கச்சாமி (எ) நவீன் (26). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 24 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாட நவீன் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் கல்லல் அருகே புரண்டி வனப் பகுதிக்குச் சென்றார். அங்கு அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல் ஒன்று நவீனை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் தப்பியோடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், நவீனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து கல்லல் போலீஸார் வழக்குப் பதிந்து, காரைக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (32), முத்துப்பாண்டி (25), சிவா (27), செஞ்சை சந்தோஷ்குமார் (23), பர்மா காலணியைச் சேர்ந்த சரவணன் (34), அரியக்குடியைச் சேர்ந்த சிவா (எ) ராமலிங்கம் (25), புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலைச் சேர்ந்த சதீஷ் (28) ஆகிய 7 பேரைச் கைது செய்தனர்.