கோயில் திருவிழாவில் மயானத்தில் இருந்து எடுத்து வந்த மனிதத் தலையை அரிவாளில் குத்தியபடி சாமியாடிய சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமத்தில் சக்தி போத்தி சுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிழா நடந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த திருவிழாவின்போது, சாமியாடி மயானத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து மனிதத் தலையை அரிவாளில் குத்தி எடுத்துக்கொண்டு, கோயிலுக்கு வந்து சாமியாடியுள்ளார்.
சுடலைமாட சுவாமி கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் சாமியாடி மயான வேட்டைக்குச் செல்வது வழக்கம். ஆனால், மயானத்தில் இருந்து மனித உடலுறுப்புகளை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வருவது இல்லை.
கல்லூரணி கிராமத்தில் நடந்த திருவிழாவில் மனித தலையுடன் கோயிலுக்கு வந்து சாமியாடிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
கரோனா ஊரடங்கு விதிமுறைகள் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு கோயில் திருவிழா நடத்தியது, மயானத்தில் இருந்து மனித தலையுடன் வந்து சாமியாடியது தொடர்பாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கல்லூரணி கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணைக்கு அழைத்து அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.