திண்டிவனம் அருகே கத்தி முனையில் 50 பவுன் நகை, 2.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
திண்டிவனம் அருகே வெளியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு (63). இவர், அதே ஊரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு (ஜூலை 25) தன் மனைவி முத்து லட்சுமி (60), மகள் விஜயகுமாரி (29) ஆகியோருடன் வீட்டை பூட்டி தூங்கினார்.
இன்று அதிகாலை (ஜூலை 26) 1.30 மணியளவில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டில் தூங்கிய வேணு குடும்பத்தாரை கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோ சாவியை கேட்டுள்ளனர்.
பிறகு, சாவியை எடுத்து பீரோவை திறந்து 50 பவுன் நகை, 3 மொபைல் போன், 2.5 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்தனர். இந்த கும்பலில் வந்த வந்த மற்றொரு நபர் வீட்டுக்கு வெளியே நின்றபடி யாராவது வருகிறார்களா என கண்காணித்துக்கொண்டிருந்தார். கொள்ளையடித்த நகை மற்றும் வெள்ளிபொருட்களுடன் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இத்தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்.பி. ஸ்ரீநாதா நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே காவல் எல்லைக்குட்பட்ட ஜக்காம்பேட்டை பகுதியில் வசிக்கும் ஜெகன், ரமேஷ் ஆகியோர், வீட்டில் கடந்த 23-ம் தேதி 18 பவுன் நகைகளை பூட்டியிருந்த வீட்டின் உள்ளே புகுந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.