காட்பாடி அருகே ஓடும் ரயிலில் சேலம் நகை வியாபாரிகள் நான்கு பேரிடம் ரூ.1 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளி நகைகள், ரூ.32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று நள்ளிரவு (ஜூலை 08) கேரள மாநிலம் கொல்லம் நோக்கிப் புறப்பட்ட விரைவு ரயில் இன்று (ஜூலை 09) அதிகாலை காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னை கோட்ட ரயில்வே குற்ற புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் மதுசூதனன் ரெட்டி, துணை உதவி ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எஸ்-6 மற்றும் எஸ்-7 பெட்டியில் பெரிய பைகளுடன் பயணம் செய்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் சேலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (42), நித்யானந்தம் (35), பிரகாஷ் (28), சுரேஷ் (35) என்று தெரியவந்தது. இவர்கள் அனைவரும் சேலத்தில் சொந்தமாக வெள்ளி நகைப்பட்டறை வைத்திருப்பது தெரியவந்தது. வெள்ளிக் கட்டிகளை வாங்கி கால் கொலுசு, காப்பு, மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களாக மாற்றி விற்றுவருவது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள நகை வியாபாரிகளுக்கு வெள்ளி ஆபரணங்களை இவர்கள் கொடுத்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளிக் கட்டிகள், ஆபரணங்கள் மற்றும் 32 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. இவற்றைப் பறிமுதல் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் நான்கு பேரையும் பிடித்து காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வசம் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தை வேலூர் மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். இதற்கு உரிய வரியை அபராதத்துடன் வசூலிப்பது அல்லது மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.