க்ரைம்

தருமபுரி சிவன் கோயிலில் வெள்ளி கிரீடம் உட்பட 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரியில் பழமையான சிவன் கோயிலில் ஒன்றரை கிலோ வெள்ளி கிரீடம் உட்பட 2 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

தருமபுரி நகரில் நெசவாளர் காலனியில் பழமையான மகாலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பூசாரியாக, தருமபுரியைச் சேர்ந்த சாந்தமூர்த்தி என்பவர் உள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றவர் இன்று (3.7.2021) அதிகாலை வழக்கம்போல் கோயிலைத் திறக்கச் சென்றுள்ளார்.

பிரதான வாயிலைத் திறந்து அவர் உள்ளே சென்றபோது கோயிலுக்குள் பொருட்கள் இறைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கோயிலுக்குள் சென்று அவர் பார்த்ததில் ஒன்றரை கிலோ எடை கொண்ட வெள்ளி கிரீடம் மற்றும் அரை கிலோ இதர வெள்ளிப் பொருட்கள், 2 கிராம் தங்க நகைகள் ஆகிய பொருட்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.

மர்ம நபர்கள் கோயிலுக்குப் பின்பகுதியில் இருந்த ஜன்னலை உடைத்து, அதன் வழியாக உள்ளே நுழைந்து, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்களுடன் இணைந்து பூசாரி சாந்தமூர்த்தி, தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருட்டுப் போன கோயிலுக்குள் ஆய்வு செய்த போலீஸார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதவிர நேற்று இரவு தருமபுரி எஸ்.வி.சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கடையிலும் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகவும் தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT