மதுரையில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய காப்பகத்தில் குழந்தை ஒன்று மாயமாகி மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள சேக்கிபட்டியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (22). மனவளர்ச்சி சற்று குன்றியவராகக் கூறப்படும் இவர், சிறு வயது முதல் அப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார்.
இவரை அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஆதரவளித்து வளர்த்து இருக்கிறார். சில ஆண்டுக்கு முன்பு ஐஸ்வர்யாவை முதியவரே திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்றும், 5 மற்றும் 1 வயதில் ஆண் குழந்தைகளும் இருக்கின்றன.
சமீபத்தில் முதியவர் இறந்த நிலையில், குழந்தைகளுடன் தனியாக வசித்த ஐஸ்வர்யாவை சிலர் தவறான நோக்கில் அணுக முயற்சித்துள்ளனர். இது பற்றி அறிந்த மேலூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அசாருதீன் என்பவர் மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகம் நடத்தும் சிவக்குமாரிடம், ஐஸ்வரியாவை அழைத்துச் சென்றுள்ளார். ஐஸ்வர்யாவின் நிலமையைச் சொல்லி, 3 குழந்தைகளுடன் காப்பகத்தில் தங்க ஏற்பாடும் செய்திருக்கிறார்.
இந்நிலையில், தாயாருடன் தங்கியிருந்த ஒரு வயது ஆண் குழந்தை ( பெயர் மாணிக்கம்) திடீரென சில நாட்களுக்கு முன் மாயமானது. இது பற்றி ஐஸ்வரியா ஜூன் 20ம் தேதி அசாருதீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அசாருதீன், சிவக்குமாரிடம் கேட்டபோது, குழந்தைக்கு கரோனா தொற்று பாதித்து, ஜூன் 13ம் தேதி முதல் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை அசாருதீனும் நம்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை பற்றி விசாரித்தபோது, அன்றைய தினம் 12 மணிக்கு குழந்தை இறந்துவிட்டதாகவும், சுகாதாரத்துறையினர் மூலம் தத்தனேரி மயானத்தில் புதைக்கப்பட்ட தாகவும் சிவக்குமார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இறப்பு, தத்தனேரியில் புதைக்கப்பட்டதற்கான மாநகராட்சி முத்திரையிட்ட ரசீதுகளும் அசாருதீனுக்கு செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குழந்தை அடக்கம் செய்ததாகக் கூறப்படும் இடத்தில் காரியம் செய்வதற்கு காப்பக ஊழியரான கலைவாணி, குழந்தையின் தாய் ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனாலும், இதில் சந்தேகமடைந்த அசாருதீன், அரசு மருத்துவமனையில் விசாரித்துள்ளார். அப்போது, சிவக்குமார் குறிப்பிட்ட தேதியில் குழந்தை ஏதும் சேர்க்கப்படவில்லை எனத் தெரிந்தது. மேலும், தத்தனேரி மயானத்திலும் அப்படியொரு குழந்தையின் உடல் புதைக்கப்படவில்லை, மாநகராட்சி முத்திரையுடன் போலி ரசீது தயாரித்து இருப்பதும் கண்டு அசாருதீன் அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் செல்வக்குமார் குழந்தை மாயம் என, வழக்குப் பதிவிட்டு விசாரிக்கிறார்.
ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், குழந்தைகள் நலக்குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு காவல் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர் செல்வக்குமார், வட்டாட்சியர் முத்துவிஜயன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அரசு மருத்துவமனை, தத்தனேரி மயானத்தில் இன்று விசாரித்தனர்.
காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி என்பவர் மூலம் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறும் இடத்தை ஆய்வு செய்தனர். அங்கு சாதாரணமாக உடல்நிலை பாதித்து, உயிரிழந்த வேறொரு குழந்தை புதைக்கப்பட்டதும், அக்குழந்தையின் பெற்றோர் வேறு நபர்கள் எனவும் தெரிந்தது.
இதையடுத்து, உடல் தோண்டி எடுக்கும் முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஒருவேளை அக்குழந்தையை விற்றுவிட்டு, கரோானாவில் உயிரிழந்ததாக நாடகமாடலாம் எனக் கூறப்படுகிறது. காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணியிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
காப்பக உரிமையாளர் சிவக்குமார், அவரது அலுவலர் ஒருவரின் செல்போன் ஸ்விட் ஆஃப் ஆகியுள்ளது. தலைமறைவான இவர்களைப் பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டிவருகிறது.
இதற்கிடையில், மாயமான குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
காப்பக உரிமையாளர் சிவக்குமார் யார் ?
காப்பக உரிமையாளர் சிவக்குமார் குறித்து போலீஸ் தரப்பில், "டாக்டர் என, கூறப்படும் சிவக்குமார், கவுரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். இதயம் டிரஸ்ட் என்ற பெயரில் மதுரையில் அரசுக் கட்டிடத்தில் முதியோர் காப்பகம் நடத்துகிறார். இவர் சாலையோரம், பேருந்து நிலையங்களில் ஆதரவற்று இருக்கும் முதியோர்களை மீட்டு, அவர்களுக்கு உதவி செய்கிறார்.
இவரது ’பொதுநல சேவை’ கண்டு காவல்துறை, அரசுத்துறை அதிகாரிகள் சிலரும் நம்பி, அவரை ஊக்கவித்துள்ளனர்.மேலும் அரசு மற்றும் சில தனியார் அமைப்பு களிடம் நிதி பெற்றதாக தெரிகிறது.
சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் குழந்தைகளையும் மீட்டு பராமரிப்பதாகக் கூறப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சமூக நலத் துறையின் முறையான விதியைப் பின்பற்றாமல், குழந்தைகளை தங்களது காப்பகத்தில் தங்க வைத்திருந்ததாக ஏற்கெனவே அவர் மீது புகாரும் எழுந்து இருக்கிறது.
அவர் ஐஸ்வர்யாவின் குழந்தையை சட்டத்துக்கு புறம்பாக விலைக்கு விற்றிருக்கலாம். இதில் சிவகுமாருக்கு என்ன லாபம் என்பது அவரை பிடித்தால் மட்டும் பின்னணி தெரியும். வேறுசில குழந்தைகளும் இவரது காப்பகம் மூலம் விற்கப்பட்டதா என, விசாரிக்கப்படும்" என்றனர்.