மதுரையில் சிறுமிக்கு தாலி கட்டியதை தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகன் தாயை கத்தியால் குத்தியுள்ளார். சிறு காயங்களுடன் தப்பித்த தாய், மகனை கைது செய்யக்கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் சமீபத்தில் உயிரிழந்தார். இவரது மனைவி பாக்கியம்; இவர்களுக்கு குமார், குருமணி, நாகராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
குருமணிக்கு ஏற்கெனவே திருமணம் நடந்த நிலையில், மூத்த மகன் குமார் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியாகாத சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று குருமணி திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதை தாய் பாக்கியமும், இளைய மகன் நாகராஜும் ஏற்கவில்லை. இது தொடர்பாக இருவரும் குமாரைக் கண்டித்துள்ளனர். தாய், மகனுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த குமார் , தாய் பாக்கியம் மற்றும் அவரது தம்பி நாகராஜை கத்தியால் தாக்கியுள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் பாதுகாப்பு கேட்டும், மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாக்கியமும், அவரது இளைய மகன் நாகராஜும் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது, ஏற்கெனவே தயாராகக் கொண்டு வந்த மண்ணெண்ணையை திடீரென தனது உடலில் ஊற்றிய பாக்கியம் தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். தாய், மகனைப் பிடித்து தல்லாகுளம் போலீஸில் ஒப்படைத்தனர்.
இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.