க்ரைம்

பாளை., சிறைக்கைதி கொலை வழக்கு: நீதி கேட்டு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் 3 இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி

அ.அருள்தாசன்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்துமனோ (27) கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இச்சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 7 பேர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் சிறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுபோல் ஜெயிலர் ஒருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதி கேட்டு 3 இளைஞர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பாபநாசம் மகன் முத்துமனோ கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் 7 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். சிறைக்குள் கொலை நடைபெற்றுள்ளதால் அப்போது பணியில் துணை சிறை அலுவலர் சிவனு, உதவி சிறை அலுவலர்கள் சங்கரசுப்பு, கங்காராஜன், ஆனந்தராஜ், சண்முகசுந்தரம், முதல் தலைமை காவலர் வடிவேல் முருகையா, சிறை காவலர் சாம் ஆல்பர்ட் ஆகிய 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் முத்துமனோவின் உடலை வாங்க மறுத்து கடந்த 55 நாட்களாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறையில் பணியாற்றிவரும் கண்காணிப்பாளர் சங்கர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் பாளையங்கோட்டை மத்திய சிறை ஜெயிலர் பரசுராமன் மதுரைக்கும் மதுரையில் பணியாற்றிவரும் வசந்தகண்ணன் பாளையங்கோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை உயர் நீதிமன்றம் முத்துமனோவின் உடலை வாங்க உறவினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் உறவினர்களோ முத்து மனோவின் கொலைக்கு காரணமான சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் முத்து மனோ கொலை வழக்கில் நீதி கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் திருநெல்வேலியை அடுத்த நாகம்மாள்புரத்தை சேர்ந்த கார்த்திக், அம்மு மற்றும் முருகன் ஆகிய 3 இளைஞர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் மூவரும் முத்துமனோவின் நண்பர்கள் ஆவர். தீக்குளிக்க முயற்சித்த இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT