சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் ரயில் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகளைக் கடத்திச் செல்லும் காட்சி. 
க்ரைம்

அரசு அதிகாரிகளை மிரட்டி ரயில் மூலம் 4 டன் ரேஷன் அரிசி கடத்தல்: காவல்துறை விசாரணை

ந. சரவணன்

ஜோலார்பேட்டை அருகே வருவாய்த் துறையினரை மிரட்டி 4 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு ரயிலில் கடத்திச் சென்ற 30-க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்துக் காவல்துறையினர் கூறியதாவது:

''திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக வந்த தகவலின் பேரில், நாட்றாம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினர் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது ரயிலில் கடத்திச் செல்ல அங்குள்ள மறைவான இடத்தில் 80 மூட்டைகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை வருவாய்த் துறையினர் கண்டனர். இதைத் தொடர்ந்து, அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்ய முயன்றபோது அங்கு வந்த 30-க்கும் மேற்பட்டோர், ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசியை வீட்டுக்கு வாங்கிச் செல்வதாக அவர்கள் கூறினர். அப்படியென்றால் எதற்காக ரயில் நிலையத்துக்கு அரிசி மூட்டைகளைக் கொண்டு வந்தீர்கள் எனக் கேட்டபோது, பதிலளிக்க மறுத்து அரிசி கடத்தல்காரர்கள் அரசு அதிகாரிகளிடம் தகராறு செய்தனர்.

அப்போது, அங்கு ஆந்திரா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரயில் வந்ததும், 80 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகளின் எச்சரிக்கையும் மீறி அந்த ரயிலில் ஏற்றிக்கொண்டு கடத்தல்காரர்கள் ஆந்திராவுக்குக் கடத்திச் சென்றனர்.

வருவாய்த் துறையினர் கண்முன்னே ரேஷன் அரிசி, ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, வட்டாட்சியர் சுமதி உத்தரவின் பேரில் நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இன்று 10-க்கும் மேற்பட்டவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம்''.

இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT