தூத்துக்குடியில் பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசப் படம் அனுப்பி மிரட்டல் விடுத்த இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த சில தினங்களாக அவரது செல்போன் வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படத்தை மர்ம நபர் ஒருவர், தெரியாத எண்ணில் இருந்து அனுப்பியுள்ளார்.
மேலும், அந்தப் படத்தை மற்றவர்களுக்கும் அனுப்பப்போவதாக மிரட்டல் விடுத்து தொடர்ந்து 10 நாட்களாக குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் கடந்த 27.04.2021 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவனுக்கு எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஏடிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆல்வின் பிர்ஜித் மேரி தலைமையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
அந்தப் பெண்ணின் செல்போனை ஆய்வு செய்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவருக்கு ஆபாச படம் மற்றும் மிரட்டல் குறுஞ்செய்திகளை அனுப்பியது, தூத்துக்குடி நாட்டுக்கோட்டை செட்டித் தெருவைச் சேர்ந்த கிளமென்ட் மகன் ஆனந்தராஜ் (32) என்பதைக் கண்டுபிடித்தனர்.
அவரை உடனடியாக கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளியை விரைவாக கைது செய்த சைபர் கிரைம் போலீஸாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.