கொல்லங்குடியில் முத்தூர் சாலையில் கொள்ளை நடந்த மதுபானக் கடையில் விசாரணை செய்யும் போலீஸார். 
க்ரைம்

காவலாளியின் கை, கால்களைக் கட்டிவிட்டு கத்தி முனையில் பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அரசு மதுபானக் கடையில் காவலாளியின் கை, கால்களைக் கட்டிவிட்டுக் கத்தி முனையில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கரோனா ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், கடைகளைப் பூட்டி கதவுகளில் வெல்டிங் வைத்து ‘சீல்’ வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் முத்தூர் சாலையில் இருந்த மதுபானக் கடைக்கு 5 பேர் கொண்ட கொள்ளையர்கள் சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த காவலாளி கண்ணனின் கை, கால்களைக் கட்டிவிட்டு, கத்தியைக் காட்டி, இரும்புக் கம்பியால் கதவை உடைத்துள்ளனர். பிறகு கடையில் இருந்த ரூ.பல லட்சம் மதிப்புள்ள உயர் வகை மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் வெளியேறியதும், காவலாளி கட்டை அவிழ்த்துவிட்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் கொள்ளை குறித்து தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த கூடுதல் எஸ்.பி. முரளிதரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT