பாம்பை சாப்பிட்டால் கரோனா வராது என்று கூறி இறந்து கிடந்த பாம்பை ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை கடித்து சாப்பிட்டதை வீடியாவும் எடுத்து வெளியிட்டதால் வனத்துறையினர் அந்த விநோத நபரை கைது செய்து அவருக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
‘கரோனா’வுக்கு இதுவரை மருந்து கட்டுப்பிடிக்கப்படாத நிலையில் சமூக இடைவெளி, முகக்கவசம், கைகழுவதுதல் போன்றவையே நம்மை பாதுகாக்கும் என்று உலக சுகாதாரநிறுவனம் கூறி வருகிறது.
மேலும், கரோனா வந்தாலும் உயிரிழக்கும் அபாயத்திற்குச் செல்லாமல் தடுக்க தடுப்பூசி போட மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகிறது.
ஆனால், தனி நபர்கள் இந்த நெருக்கடியான காலத்தைப் பயன்படுத்தி பல்வேறு மருந்துகளை தயார் செய்து அதை சாப்பிட்டால் கரோனா வராது, வந்தாலும் சரியாகிவிடும் என்று சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோக்கள் வைரலாகுவதால் மக்கள் எதை நம்புவது, நம்பாமல் இருப்பது என குழப்பமடைந்து அந்த மருந்துகளையும் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அருகே வாடிப்பட்டியில் ஒருவர், பாம்பு ஒன்றை பிடித்து அதை கடித்து சாப்பிடுவதும், பாம்பை சாப்பிட்டால் கரோனா வராது என்று கூறும் ஒரு வீடியோ கடந்த சில நாளாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
அதிர்ச்சியடைந்த மதுரை மாவட்ட வனபாதுகாப்பு அலுவலர் ஆனந்த் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் பாம்பை பிடித்து கடித்து சாப்பிட்ட வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்த வடிவேலுவை (50) கைது செய்து அவருக்கு 7 ஆயிரம் ரூபாய் அபராம் விதித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட வடிவேலு சாதாரண ஒரு கூலித்தொழிலாளி. ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அவரது வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடையில் கட்டுவீரியன் பாம்பு இறந்து கிடந்துள்ளது. வடிவேலு மது குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார்.
தன்னை மறந்தநிலையில் இருந்த அவரை அருகில் இருந்த சிலர், இறந்து கிடந்த பாம்பை எடுத்து கடித்து சாப்பிடச் சொல்லியும், அதைச் சாப்பிட்டால் கரோனா வராது என்று கூறி சொல்லியும் தூண்டிவிட்டு வீடியோ எடுத்துள்ளனர்.
அதனாலேயே அவர் அந்த பாம்பை பல்லால் உறித்து இலேசாக மென்னு சாப்பிட்டுள்ளார். அவர் அதை கடித்து முழுமையாக சாப்பிடவில்லை. அதனால், அதிர்ஷ்டவசமாக பாம்பின் விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் பாம்பை கடித்து சாப்பிடுவது போன்ற வீடியோ எடுத்திற்காக வனத்துறை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம்’’ என்றார்.
பாம்பை கடித்து சாப்பிட்டால் கரோனா வராது என்று ஒருவர் பாம்பை கடித்த சாப்பிட்ட இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.