ஆம்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரைக் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் சாராய வியாபாரிகள், தங்களது சாராய வியாபாரத்தைப் பல இடங்களில் விரிவுபடுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி, ஏலகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், கள்ளச்சாராய விற்பனை பரவலாக நடைபெறுவதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்குத் தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், மாவட்ட மதுவிலக்கு தடுப்புப் பிரிவு காவல் துறையினர், உள்ளூர் காவல் துறையினர் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, கடந்த வாரம் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 18 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் 2,300 லிட்டர் சாராய ஊறல்களைக் காவல் துறையினர் அழித்தனர்.
சாராயக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 3 இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இருப்பினும், சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உமராபாத் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25), பிரேம்குமார் (22) ஆகியோர், சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 2 பேரைக் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 90 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, உமராபாத் பிரதான சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேரணாம்பட்டு பகுதியில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த வாகனத்தில் 100 லிட்டர் சாராய பாக்கெட்டைக் கடத்தி வந்த ஆம்பூர் மளிகை தோப்புப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (31) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனம், சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.