ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூக்கண்டப்பள்ளியில் பூட்டிய வீட்டில் புகுந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபரைத் தனிப்படை போலீஸார் கைது செய்து 260 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
ஓசூர், மூக்கண்டப்பள்ளி எம்.எம். நகர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர் மாதையன். இவர் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் புதியதாகக் கட்டி வரும் வீட்டைப் பார்வையிட குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர், மூக்கண்டப்பள்ளியில் உள்ள மாதையன் வீட்டின் முதல் தள ஜன்னலை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் ஓசூர் டிஎஸ்பி முரளி மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மூக்கண்டப்பள்ளி எம்.எம். நகரில் வசிக்கும் லூர்துராஜ் என்பவரைச் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாதையன் வீட்டில் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததை லூர்துராஜ் ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அருண் (எ) லூர்துராஜ் என்பவரைக் கைது செய்த தனிப்படையினர், அவரிடமிருந்து 260 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர். இந்த வழக்கில் திறமையாகச் செயல்பட்டு தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீஸாரை, மாவட்ட எஸ்.பி. மற்றும் ஓசூர் டிஎஸ்பி ஆகியோர் பாராட்டினர்.