பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

நாகை மீனவர்களிடையே மோதல்; 3 பேருக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது

தாயு.செந்தில்குமார்

நாகையில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில், 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மோதலை தவிர்க்க மீனவ கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகை ஆரியநாட்டுத் தெருவை சேர்ந்த மீனவர்களில் ஒரு பகுதியினருக்கு, சுனாமி பேரழிவுக்குப் பிறகு மகாலெட்சுமி நகர், சவேரியார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுனாமி நிரந்தர வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இதனால் மகாலெட்சுமி நகர் மீனவர்களுக்கும், ஆரியநாட்டுத் தெரு மீனவர்களுக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில்,ஆரியநாட்டுத் தெருவை சேர்ந்த தர்மபாலன் என்பவரை மீனவர் பஞ்சாயத்து தலைமை பொறுப்பிலிருந்து மாற்ற மகாலெட்சுமி நகரை சேர்ந்த மாரியப்பன் (29), ராஜேந்திரன், நகுலன் உள்ளிட்டோர் முடிவு செய்திருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆரியநாட்டுத் தெருவை சேர்ந்த தர்மபாலன், அவரது ஆதரவாளர்கள் ஆனந்தன், கதிர், நவீன், உதயா, அரவிந்த், குலோத்துங்கன், அருண்பாண்டி, பிரகதீஷ், அருள், சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த ஜெனிபர் (35) ஆகிய 11 பேர், நேற்று (ஏப். 07) சவேரியார் கோவில் தெருவில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மாரியப்பனை வழிமறித்து, உருட்டு கட்டை மற்றும் கத்தியால் தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த மாரியப்பனை விரட்டி வந்து, ஏழைப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன் பிடித்து மீண்டும் தாக்கினர். அதை தடுக்க வந்த, ராஜேந்திரன், நகுலன் ஆகியோரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

படுகாயம் அடைந்த மாரியப்பன், ராஜேந்திரன், நகுலன் ஆகியோர், நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வெளிப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து, சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த ஜெனிபர் என்பவரை இன்று (ஏப். 08) கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். ஆரியநாட்டுத் தெரு, மகாலெட்சுமி நகர், சவேரியார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT