யாரென்று விசாரிக்காமல் இரக்கப்பட்டு வேலை கொடுத்து, குடும்பத்தையும் தங்கவைத்து அழகு பார்த்த முதலாளி அம்மாவைக் கொலை செய்து நகை, பணத்தைத் திருடிக்கொண்டு குடும்பத்துடன் மாயமான கர்நாடக இளைஞரை போலீஸ் தேடுகிறது.
சென்னை, மாதவரம், பொன்னியம்மன் மேடு , தணிகாசலம் நகர், 5 வது பிராதன சாலையில் வசிப்பவர் ரவி (52). இவர், சௌகார் பேட்டையில் சொந்தமாக பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மனைவி கலைவாணி (47). இவர்களுக்கு உமேஷ் என்ற மகன் உள்ளார். உமேஷ் புனேவில் படித்து வருகிறார்.
15 நாட்களுக்கு முன் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க ஆள் வேண்டும் என்று நண்பர் பாபுவிடம் ரவி கேட்டுள்ளார். பாபு அவருக்கு ராகேஷ் (30) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். வீட்டுக்கு அழகாக பெயிண்ட் அடித்துக் கொடுத்த ராகேஷை ரவியின் குடும்பத்திற்குப் பிடித்துப் போய்விட்டது. ராகேஷ் குறித்து விசாரிக்க, தான் வேலை தேடி வருவதாக ராகேஷ் கூறியுள்ளார். எங்கள் வீட்டுக்கே ஒரு ஆள் தேவை, இங்கேயே இருந்துகொள் என்று ரவி கூறியுள்ளார்.
ராகேஷ், விசுவாசமான வீட்டு வேலைக்காரனாக நடந்துகொண்டார். அதற்காக அவரது மனைவி ரேவதி, குழந்தைகளுடன், ராகேஷை தன் வீட்டின் ஒரு இடத்தில் தங்க வைத்தார் முதலாளி அம்மா கலைவாணி.
ரவி காலையில் தனது ஃபைனான்ஸ் கம்பெனிக்குச் சென்றால் நள்ளிரவில்தான் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை பணிக்குச் சென்றவர், வீடு திரும்ப நேரமாகும் என்பதைச் சொல்ல மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் போகவில்லை.
உடனே வேலையாள் ராகேஷுக்கு போன் செய்ய அவரும் போனை எடுக்கவில்லை. இதனால் குழப்பமடைந்த ரவி உடனடியாக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீடு வெளியில் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு உள்ளே ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மனைவி கை, கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்துள்ளார். அங்கே அவர் மனைவி கலைவாணி பின்னந்தலையில் காயத்துடன் கிடந்தார். அவரை சோதித்தபோது அவர் இறந்து போயிருந்தது தெரியவந்தது.
ஆளில்லாததைப் பயன்படுத்திக் கொண்டு ராகேஷ் கலைவாணியைத் தாக்கி, அவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 15 சவரன் எடையுள்ள தாலி, வளையல்கள், ரொக்கப் பணம் 10 ஆயிரம் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு குடும்பத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து மாதவரம் போலீஸுக்குக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த போலீஸார் கலைவாணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ராகேஷ் தனது மனைவி, குழந்தைகளுடன் ஆட்டோவில் தப்பிச் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
ராகேஷைப் பிடிக்க தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்துள்ளனர். ஓரிரு நாளில் ராகேஷ் சிக்கி விடுவார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து போலீஸார் குறிப்பிடுகையில், ஒருவரை வேலைக்கு வைக்கும் முன் அவரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். விசாரிக்காமல் வேலைக்கு வைக்கப்படும் நபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களாக இருந்தால் நமது இரக்கமே இறப்புக்கும் காரணமாக அமைந்துவிடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் ஆவடியில் இதேபோன்று ஆந்திர இளைஞரைக் குழந்தையில்லாத் தம்பதி தனது வீட்டில் அவருடைய மனைவியையும் அழைத்து வரச்சொல்லி தங்கவைத்து தங்கள் பிள்ளை போல் பார்த்துக்கொண்டனர். கணவன, மனைவியை அந்த இளைஞர் கொன்றுவிட்டு நகை, பணம், மோட்டார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.
குற்றம் நடந்து சில ஆண்டுகள் கழித்து வடமாநிலம் ஒன்றில் குற்றவாளி சிக்கினார். இரக்கப்பட்டு தங்க இடம் கொடுத்த வயதான தம்பதிக்குக் கிடைத்தது மரணம். ஆகவே, அறிமுகம் இல்லாத நபர்களைப் பணிக்கு வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.