காரில் கடத்தப்பட்ட சாராயத்துடன் காவல்துறையினர் . 
க்ரைம்

புதுச்சேரி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 352 லிட்டர் சாராயம் பறிமுதல்; இருவர் கைது  

அ.முன்னடியான்

புதுச்சேரி அருகே இருவேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 352 லிட்டர் சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதனிடையே, மாநில எல்லைகளில் மதுபான கடத்தலை தடுக்க சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் சாராயக் கடையில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, அதிகளவில் சாராய பாக்கெட்டுகள் தயார் செய்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, புதுச்சேரி தெற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் ஆய்வாளர் வரதராஜன் மற்றும் போலீஸார் நேற்று (மார்ச் 3) இரவு சம்பந்தப்பட்ட சாராய கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, 20 சாக்கு மூட்டைகளில் 100 எம்எல் அளவுகளில் சாராய பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கடையில் இருந்த 277 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும். மேலும், இது தொடர்பாக சோரியாங்குப்பத்தை சேர்ந்த தேவநாதன் என்பவரை கைது செய்தனர்.

இதேபோல், இன்று (மார்ச் 4) கிருமாம்பாக்கம் காவல்துறை உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் காவலர்கள் புதுச்சேரி முள்ளோடை - பரிக்கல்பட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 500 எம்எல் சாராய பாட்டில் மற்றும் 180 எம்எல், 150 எம்எல், 90 எம்எல் அளவு கொண்ட சாராய பாக்கெட்டுகள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் பதுக்கப்பட்டிருந்த 75 லிட்டர் சாராய பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட சாராயத்தின் மதிப்பு ரூ.76 ஆயிரமாகும். கடத்தலில் ஈடுபட்ட உச்சிமேடு பொறையாத்தம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சின்னத்துரை (40) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவற்றை புதுச்சேரி கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT