க்ரைம்

பட்டினப்பாக்கத்தில் குழந்தைகளைக் கடத்த முயற்சி: சிறுமியின் புத்திசாலித்தனத்தால் தப்பி ஓடிய கும்பல் 

செய்திப்பிரிவு

சென்னை பட்டினப்பாக்கத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் கடத்த முயன்றது. சிறுமியின் புத்திசாலித்தனமான செயலால் அந்த கும்பலின் முயற்சி நிறைவேறாமல், தப்பி ஓடியது.

சென்னை பட்டினப்பாக்கம் ராஜா தெருவில் வசிக்கும் குழந்தைகள் சிலர், நேற்று மதியம் அவர்கள் வசிக்கும் தெருவிலேயே ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து இரண்டு நபர்கள் இறங்கினர்.

அவர்கள் இருவர் கையிலும் நிறைய கைக்குட்டைகள் இருந்தன. இருவரும் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அருகில் அழைத்தனர். 'என்ன விளையாடுகிறீர்கள்?' என்று கேட்டுள்ளனர். 'ஓடிப்பிடித்து விளையாடுகிறோம்' என்று அவர்கள் பதில் அளிக்க, 'அதைவிட கண்ணாமூச்சி ஆட்டம் ஆடலாமே நன்றாக இருக்கும்' என இருவரும் தெரிவித்துள்ளனர்.

'எங்களிடம் கைக்குட்டை இருக்கு. வாருங்கள் கட்டிவிடுகிறோம்' என அவர்கள் குழந்தைகளை ஆட்டோவுக்குள் அமர அழைத்துள்ளனர். அதில் ஒரு பெண் குழந்தை உஷாராகி, 'எதற்கு இவ்வளவு கைக்குட்டை வைத்துள்ளீர்கள், தெருவில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினால் கீழே விழுந்து அடிபடுமே. உங்களைப் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது. இருங்க, என் பாட்டியைக் கூப்பிடுகிறேன்' என்று கூறி ஓடியுள்ளது.

வீட்டுக்குள் ஓடிய சிறுமி, பாட்டியிடம் விஷயத்தைச் சொல்லி வீட்டில் உள்ளவர்களை அழைத்து வந்தார். இதைப் பார்த்து பயந்துபோன அவர்கள் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அத்தெருவில் வசிக்கும் பெற்றோர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்தனர்.

பட்டப்பகலில் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கடத்த வந்த கும்பலால் பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் சாமர்த்தியத்தால் கடத்தல் கும்பலின் குட்டு வெளிப்பட்டு தப்பி ஓடியதால், குழந்தைகள் தப்பினர். இதனால் பெற்றோருக்கும் போலீஸாருக்கும் நிம்மதி ஏற்பட்டது.

கடத்தல் கும்பல் குறித்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய பட்டினப்பாக்கம் போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் ஆட்டோவில் வந்தவர்கள் உருவமும், ஆட்டோவும் பதிவாகியிருந்தது. அதை வைத்து ஆட்டோவில் வந்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT