திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை, மாதவரம், கன்னியப்பன் தெருவில் வசித்தவர் சதீஷ்குமார் (68). லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். இவரது மனைவி சாந்தி (60), மகள் பத்மபிரியா (34), மருமகன் மென்பொருள் பொறியாளர் ஸ்ரீபால் (42), பேரன் ஆர்யா (12), பேத்தி மிருதுளா (8). இவர்கள் அனைவரும் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் நேற்று வந்தனர். காரை ஸ்ரீபால் ஓட்டி வந்துள்ளார்.
இதேபோல் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வேலூருக்கு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி என்ற இடத்தில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஸ்ரீபால், பத்மபிரியா, சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சதீஷ்குமார், ஆர்யா, மிருதுளா ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். மேலும், கார் மீது மோதிய அரசுப் பேருந்து, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையிலான காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சதீஷ்குமார் உள்ளிட்ட 3 பேரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து கண்ணாடிகளை உடைத்து, அதிலிருந்த பயணிகளையும் மீட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, இடிபாடுகளில் சிக்கிய கார் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், சாலையோரத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்தும் மீட்கப்பட்டது. இதற்கிடையில், காரில் இருந்த தங்க நகைகளைக் காவல்துறையினர் கைப்பற்றிப் பாதுகாத்தனர்.
இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாத்தா, பாட்டி, தாய், தந்தையை இழந்து 2 பிள்ளைகளும் தவிப்பது நெஞ்சை உலுக்கியது. உயிரிழந்த ஸ்ரீபாலுக்கு, திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் மின் நகர் சொந்த ஊராகும்.