காவல்துறையில் ஓய்வுபெற்ற டிஜிபியின் மகனுடன் வாய்த்தகராறு ஏற்பட்டதில், நண்பருடன் சேர்ந்து தாக்கிவிட்டுத் தலைமறைவான ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஐபிஎஸ் அதிகாரி வைகுந்த். இவர் ராஜா அண்ணாமலைபுரம், பிஷப் கார்டனில் வசித்து வருகிறார். இவரது மகன் விஜய் (42), மருத்துவராக உள்ளார். இவர் கடந்த மாதம் 12-ம் தேதி ஆழ்வார்பேட்டை அருகே இருக்கும் ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்துவதற்காகத் தனக்குத் தெரிந்த பில்லா என்கிற நபரின் ஆட்டோவில் சென்று உணவருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
தனது வீட்டிற்கு அருகே உள்ள பாகிரதி தெருவில் இறங்கிய அவருக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரை மருத்துவர் விஜய் திட்டியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் பில்லா தனக்குத் தெரிந்த நண்பர் கருப்பன் என்பரை வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து விஜய்யைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
விஜய் அவசர வேலையாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் போலீஸில் உடனடியாகப் புகார் அளிக்கவில்லை. நேற்று மாலை 7 மணி அளவில் அவர் அபிராமபுரம் போலீஸில் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் போலீஸார் ஐபிசி பிரிவு 341 (செயல்படவிடாமல் தடுப்பது) , 294 (b) (தகாத வார்த்தைகளால் பேசுவது) 323 (காயப்படுத்தும் நோக்குடன் தாக்குவது), 506 (i) (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.