கீரனூர் பைபாஸ் சாலையில் பொக்கன்குளம் எனும் இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோர இரும்புத் தடுப்பில் கார் மோதியது. இதில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
சென்னை வேளச்சேரியில் இருந்து 9 பேர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரானது, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பைபாஸ் சாலையில் பொக்கன்குளம் எனும் இடத்தில் வந்தபோது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோர இரும்புத் தடுப்பில் மோதியது.
இதில், காருக்குள் சிக்கியவர்களை கீரனூர் போலீஸார் மற்றும் பொதுமக்கள் மீட்டனர். அதில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ராமன் (30), அவரது மகன் ரட்சன்(2) ஆகியோர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், காயம் அடைந்த வேளச்சேரியைச் சேர்ந்த எம்.பாலையா (68), பாலையா மனைவி லட்சுமி (50), மகள் சிவகாமி (22), ராமன் மனைவி ஜெயந்தி (25), சுரேஷ் மகன் தர்வேஸ் (5), நந்தினி (30) மற்றும் கார் ஓட்டுநர் சென்னை திருவொற்றியூர், சீனிவாசநகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சிலம்பரசன் (34) ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து கீரனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.