கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 4 வீடுகளில் 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.70 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (57). இவர் மின்சார வாரியத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சாமல்பட்டியில் தனது மாமனார் இறந்துவிட்டதால், அவரது இறுதிச் சடங்கிற்கு கடந்த 26-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் அங்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று (29-ம் தேதி) இவரது வீட்டின் அருகில் இருந்தவர்கள், போன் மூலம், வீடு திறந்துள்ளது எனத் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சாமல்பட்டியில் இருந்து புறப்பட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
மத்திகிரி அடுத்த அச்செட்டிப்பள்ளி கேட் பகுதியைச் சேர்ந்த விவசாயி பசுவராஜ் (54). இவர் நேற்று (29-ம் தேதி) காலை தனது வீட்டைப் பூட்டிவிட்டு, எப்போதும் வைக்கும் இடத்தில் சாவியை வைத்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் விவசாயம் செய்ய நிலத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் மாலை வந்து பார்த் போது, வீட்டின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்திருந்தது. அதில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 70 ஆயிரம் கொள்ளையடிக்கபட்டிருந்தது தெரியவந்தது.
மத்திகிரி அடுத்த இடையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேஷ்(40). இவர் பொருட்கள் வாங்க தனது வீட்டைப் பூட்டி, வழக்கமாக சாவி வைக்கும் இடத்தில் சாவியை வைத்துவிட்டுச் சென்றார். 2 மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கெலமங்கலம் அடுத்த பைரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரோஜம்மா (54). இவர் நேற்று (29-ம் தேதி) காலை வீட்டைப் பூட்டிவிட்டு, விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் மாலை வந்து பார்த்தபோது, வீடு திறக்கப்பட்டு, உள்ளே பீரோவும் திறக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் திருட்டுப் போனது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 4 இடங்களில் 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.70 லட்சம் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.