சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில், 621 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தமிழக காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த 3 முதல் 5-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் முக்கிய சாலைகள், எல்லைப் பகுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த 3 நாள் நடவடிக்கையில், போதைப் பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், 617 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 296 கிலோ கஞ்சா, 1.3 கிலோ பிறபோதைப்பொருட்கள், 802 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் தொடர்புடைய 621 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில், 6,653 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போதைப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தல், பதுக்கல் அல்லது விற்பனை தொடர்பான தகவல்கள் தெரிந்தால், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு (Drug Free TN) செயலி, கட்டணமில்லா உதவி எண் ‘10581’ அல்லது 94984 10581 என்ற வாட்ஸ்-அப் எண்ணின் மூலம் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று, டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.