5 வயதான மாற்றுத்திறனாளி சிறுமிக்கு 3 மாதங்கள் தொடர் பாலியல் துன்புறுத்தல் அளித்த வாடகை வாகன ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (51). ஓட்டுநரான இவர், தனது வாடகை வாகனத்தில் 5 வயதான காது கேட்காத, வாய்பேச முடியாத சிறுமியை தினந்தோறும் தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். சிறுமி மாற்றுத்திறனாளி என்பது தெரிந்ததும், அதைப் பயன்படுத்தி தொடர்ந்து 3 மாதங்கள் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.
இதை அறிந்த சிறுமியின் தாய், 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (போக்ஸோ) வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், பாலனைக் கைது செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜெ.ராதிகா இன்று (டிச.30) தீர்ப்பளித்தார். அதில், பாலனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, பாலன் செலுத்த வேண்டிய ரூ.1.50 லட்சம் அபராதம் மற்றும் அவரது வாகனத்தை அரசிடம் ஒப்படைத்து அதில் வரும் தொகையைப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும், நிவாரணமாக அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.