க்ரைம்

விதிகளை மீறி நைட் கிளப் கொண்டாட்டம்: சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேர் கைது

செய்திப்பிரிவு

மும்பையில் இருக்கும் நைட் கிளப் ஒன்றில் கோவிட்-19 விதிமுறைகளை மீறி பார்ட்டி நடத்தியதால் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவுவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையம் அருகே இருக்கும் ட்ராகன் ஃபளை கிளப் என்கிற இடத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நேரம் செலவிட்டதாக சுரேஷ் ரெய்னா, ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூஸன் கான், பாடகர் குரு ரந்தவா உள்ளிட்ட 34 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கிளப்பைத் திறந்து வைத்திருந்த குற்றத்துக்காக அந்த கிளப்பின் பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 2.30 மணியளவில் இந்தக் கைது நடந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கிளப்பைத் திறந்து வைத்திருந்தது, சமூக விலகல், முகக்கவசம் அணிதல் என கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் பின்பற்றாமல் இருந்தது, தொற்று பரப்பி உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எனப் பல குற்றங்களுக்காக, 188, 269, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பின்னர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை. அடுத்ததாகத் தனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேச அணிக்காக, சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆட்டத்தில் விளையாடவிருக்கிறார்.

SCROLL FOR NEXT