முகநூல் மூலம் அறிமுகமான சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி சேலத்துக்கு கடத்திச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அண்ணா நகர் காவல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியைக் காணவில்லை என்று அவரது தந்தை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், காணாமல் போன சிறுமி சேலத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் சிறுமியை மீட்டு அவருடன் தங்கியிருந்த சேலம் மாவட்டம், கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் விமல்ராஜுக்கும், அந்த சிறுமிக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டதாகவும், விமல்ராஜ் அந்தச் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து, விமல்ராஜை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.