மதுரையில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1,19,500 மதிப்பிலான போலி நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மதுரை கூடல்புதூர் அருகே பனங்காடியிலுள்ள ஒரு பலசரக்குக் கடையில் கள்ள நோட்டு கொடுத்துப் பொருட்கள் வாங்கியபோது, கூடல்புதூரைச் சேர்ந்த காதர்பாட்சா(54) என்பவர் நேற்று முன்தினம் சிக்கினார். இவரிடம் நடத்திய விசாரணையில், மேலும் 5 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
காதர் பாட்சா கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை செவக்காடு கண்ணன் மகன் மணி (48), சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகிலுள்ள பொட்டப்பாளையம் வேலாயுதம் மகன் ஈஸ்வரன் (35), மதுரை மீனாம்பாள்புரம் தங்கவேல் மகன் விக்னேஷ்குமார் (34), தூத்துக்குடி மாவட்டம், டூவி புரம் மெயின்ரோட்டைச் சேர்ந்த குருமூர்த்தி (61) மற்றும் காதர்பாட்சா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காதர்பாட்சாவிடம் இருந்து 39 போலி 500 ரூபாய் நோட்டுகள், குருமூர்த்தியிடம் 200 போலி 500 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ.1,19,500 மதிப்பிலான போலி நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இரு சக்கர வாகனம் ஒன்று, 5 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் முக்கிய நபராகக் கருதப்படும் ஓசூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தலைமறைவாக உள்ளார். இவரிடம் இருந்தே மேற்கண்ட 5 நபர்களுக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள் சப்ளையாகி இருப்பது தெரிகிறது. அவரைப் பிடித்தால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும் என, போலீஸார் தெரிவிக்கின்றனர்.