கணினியில் தொடர்ந்து விளையாடி வந்ததைத் தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நெய்வேலி வடக்குத்து காந்திநகரைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் மாற்றுக் குடியிருப்பில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தார். தந்தை புகைப்படக் கலைஞர் என்பதால் வீட்டில் கணினி இருந்தது. நேற்று (நவ. 19) மாலை தந்தை வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த நிலையில், சிறுவன் வீட்டிலிருந்த ஒரு அறையில் கணினியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியதும், அவரது தாயார், மகனிடம் சென்று இடி, மின்னல் நேரத்தில் கணினியில் விளையாட வேண்டாம் எனக் கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சிறுவன், சிறிது நேரத்தில் அந்த அறையைத் தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் வெளிவராத நிலையில், சந்தேகமடைந்த பெற்றோர், கதவைத் தட்டினர். ஆனால், அச்சிறுவன் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார், வழக்குப் பதிவுசெய்து, சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பெரும்பாலான குடும்பங்களில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்குமான கலந்துரையாடல் மிகக் குறைவே. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டில் மாணவர்கள் முடங்கிக் கிடக்கும் சூழலில், செல்போனும், கணினியும் அவர்களுக்குச் சிறந்த பொழுதுபோக்குச் சாதனமாக மாறிவிடுகிறது. அவை அவர்களை எளிதில் கவர்வதாலும் அவற்றுக்கு அவர்கள் அடிமையாகும் சூழலும் நிலவுகிறது.
இந்தத் தருணத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செல்போன், கணினிகளுக்கு மாற்றாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் எனவும், குறிப்பாக நன்னெறிக் கதைகள் அடங்கிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும், குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.