புதுச்சேரியில் சேற்றில் முக்கியும், கல்லால் அடித்தும் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் சிவசக்தி நகர் - அமைதி நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் ஜெயபிரகாஷ் (27). இவர் குருமாம்பேட் வழுதாவூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று (நவ.18) இரவு ஜெயபிரகாஷ் பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரைச் சரமாரியாகத் தாக்கி அந்த வாகனத்திலேயே கடத்திச் சென்றது.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து ஜெயபிரகாஷைத் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (நவ. 19) அய்யங்குட்டிபாளையத்தில் இருந்து அரசூர்-பொறையூர் செல்லும் சாலையில் ஒரு காலிமனையில் சேற்றில் முக்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இளைஞர் பிணமாகக் கிடப்பதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அப்போது, அங்கு சேற்றில் முக்கியும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட ஜெயபிரகாஷுக்கும், சண்முகாபுரத்தைச் சேர்ந்த சபரிக்கும் மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரோலியாக நேற்று இரவு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெயபிரகாஷை மோட்டார் பைக்கில் கடத்திச் சென்று சரமாரியாகத் தாக்கி அங்குள்ள காலிமனையில் சேற்றில் முக்கியும், பின்னர் அங்கு மனைகள் பிரிக்க வைத்திருந்த பாறாங்கல்லை எடுத்து ஜெயபிரகாஷின் தலையில் போட்டும் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, கொலை தொடர்பாக சண்முகாபுரம் சபரிநாதன், ராஜா, கார்த்திக், மார்த்தான் ஆகிய 4 பேரைப் பிடித்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.