க்ரைம்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வீட்டில் தனியாக இருந்த முப்புடாதி (35) என்ற இளம்பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

முக்கூடல் அடுத்த செங்குளம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சேர்ந்தவர் முத்துப்பாண்டி( 40 ) . தூத்துக்குடியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முப்புடாதி. இந்த தம்பதிக்கு மாரிசெல்வன் என்ற ஒரு மகன் உள்ளார்.

முத்துப்பாண்டி தூத்துக்குடிக்கு நேற்று வேலைக்குச் சென்றிருந்தார். சிறுவன் மாரிச்செல்வன் விளையாடச் சென்றிருந்தான். வீட்டில் முப்புடாதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் முப்புடாதியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி உள்ளனர்.

மழை காரணமாக அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் முப்புடாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் யாருக்கும் மாலை வரை தெரியவில்லை. இரவில்தான் தெரியவந்தது.

தகவல் அறிந்ததும் பாப்பாகுடி இன்ஸ்பெக்டர் பொறுப்பு விஜயகுமார், உதவி ஆய்வாளர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முப்புடாதி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் பாப்பாக்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள். செங்குளத்தில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT