பிரதிநிதித்துவப் படம். 
க்ரைம்

திருக்கோவிலூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன?

ந.முருகவேல்

திருக்கோவிலூரை அடுத்த சிறுபனையூர் கிராமத்தில் பக்கத்து வீட்டு நபரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவரை திருப்பாலப்பந்தல் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுபனையூர் தக்கா கிராமப் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் சையத் ஹனீப் என்பவரது மகன் ஹாரூன் (40). இவரது தந்தை சையத் ஹனீப் பெயரில் உரிமம் பெற்ற நாட்டுத் துப்பாக்கி வீட்டில் இருந்துள்ளது. ஹாரூன், மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஊரில் உள்ளவர்களும் அவரை மனநிலை சரியில்லாத நபர் என்று அடையாளப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (நவ.13) தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வீட்டுக்கு முகத்துவாரத்தில் அமர்ந்தவாறு துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தாராம் ஹாரூன். அப்போது, இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் மளிகைக் கடை உரிமையாளர் ஷான்பாஷா (45) என்பவர், மளிகைக் கடைக்கு ஹாரூன் வீட்டைக் கடந்து சென்றபோது, ஹாரூன் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில், குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஷான்பாஷா மயங்கி விழுந்துள்ளார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து, ஷான் பாஷாவை மீட்டுச் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பாலப்பந்தல் போலீஸார், ஹாரூனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் நேரில் சென்று விசாரணை நடத்திவருகிறார்.

SCROLL FOR NEXT