பாலியல் புகாரில் கைதாகியுள்ள காசியின் லேப் டாப்பில் இருந்து அழிக்க முயற்சி செய்த 800-க்கும் மேற்பட்ட படங்கள், மற்றும் வீடியோக்களை சைபர் கிரைம் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி (28) சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி அவர்களை ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மாணவிகள், பெண்கள் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் காவல் நிலையங்களில் ஏற்கனவே காசி மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. காசி மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரில் காசி மீது சிபிசிஐடி போலீஸார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் காசி மீதான வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. காசியை கடந்த 7-ம் தேதியில் இருந்து 5 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது காசியின் பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்களின் விவரங்களும் தெரியவந்துள்ளது.
தொடர் பாலியல் புகார்கள் காசி மீது குவிந்து வருவதால், அவர் குறித்த மேலும் பல ஆதாரங்களை திரட்டும் வகையில் சைபர் கிரைம் போலீஸார் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வந்திருந்தனர்.
அவர்கள் நாகர்கோவிலில் உள்ள காசியின் வீட்டில் அவர் பயன்படுத்திய லேப்டாப்பை ஆய்வு செய்தனர். அப்போது அதில், காசி தொடர்பு வைத்திருந்த பெண்கள், மாணவிகளின் படங்கள், வீடியோக்களை அழிக்க முயன்றிருப்பது தெரியவந்தது.
அவற்றை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் கிரைம் போலீஸார் கைப்பற்றினர். 800-க்கும் மேற்பட்ட காசி தொடர்புடைய ஆபாச படங்கள், மற்றும் வீடியோக்களை சைபர் கிரைம் போலீஸார் கைப்பற்றி, அவற்றை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளனர்.
இதில் பெரும்பாலான படங்கள் காசி செல்போனில் எடுத்து மார்பிங் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட வீடியோ, படங்களில் இருக்கும் பெண்களைத் தொடர்புகொண்டு காசி குறித்த பாலியல் குற்றங்களை விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.