பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

கொத்தடிமைகளாக இருந்த ஐந்து சிறுமிகள் மீது கூட்டுப் பாலியல் வன்முறை; விசாரணையில் அம்பலம்: போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் ஆறு பேர் கைது

செ.ஞானபிரகாஷ்

கொத்தடிமைகளாக புதுச்சேரியில் வாத்து மேய்க்க அடைக்கப்பட்டு, மீட்கப்பட்ட 5 தமிழகச் சிறுமிகளிடம் நடந்த விசாரணையின்போது அவர்கள் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரியவந்தது. பத்துப் பேர் கொண்ட கும்பலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியிலிருந்து கரும்பு வெட்டும் கூலித்தொழிலுக்காக சிலர் புதுச்சேரி கிராமப் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, வாத்து மேய்க்கும் பணிக்காக, புதுச்சேரி கோர்க்காடு கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வாத்து மேய்க்கும் பண்ணை வைத்திருப்போர், தந்தையில்லாத ஐந்து வளர்ப்புப் பெண் குழந்தைகளை இரண்டரை ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்திருந்தனர். வாத்துகள் பெரியதானவுடன் கேரளத்துக்கு அனுப்பும் வரை இவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அக்குழந்தைகளைத் தனியாக வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து குழந்தைகள் நலக்குழுவினர் கடந்த மாதம் 23-ம் தேதி மீட்டனர். அதைத் தொடர்ந்து, மங்கலம் உதவி ஆய்வாளர் சரண்யா விசாரணை நடத்தி வந்தார்.

காவல் துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நிலையில், மீட்கப்பட்ட சிறுமிகள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து, சிறுமிகளை மீட்ட குழந்தை நலக்குழு விசாரித்தது. கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளானதை உறுதி செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நலக்குழு, போலீஸாரிடம் விசாரித்தபோது, "மீட்கப்பட்ட சிறுமிகளிடம் ஆலோசனை வழங்கி விசாரித்தபோது, பாலியல் வன்முறைக்கு ஆளானது குறித்துத் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளில் 13 வயதுடைய சிறுமி கருவுற்று இருப்பது தெரியவந்தது.

மேலும், மற்ற சிறுமிகள் பற்றி மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகே அவர்கள் நிலை குறித்து தெரியவரும். சிறுமிகளுக்குப் பெற்றோர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்களின் கையைக் கட்டி வைத்தும், போதைப் பொருட்களை வலுக்கட்டாயமாகத் தந்தும் இந்தக் குற்றச் சம்பவத்தில் சுமார் 10 நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் வாத்து மேய்க்கும் பண்ணையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து அவர்களை அடிமைகளாக நடத்தி, இதுபோன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சிறுமிகள் வேலை செய்த இடத்தில் உரிமையாளர் அவரது மகன், உறவினர்கள் மற்றும் அங்கே வேலைக்கு வரும் நபர் எனப் பலர் அங்கிருந்த சிறுமிகள் மீது தொடர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளனர். வழக்கில் 6 நபர்களைக் கைது செய்துள்ளோம். மேலும், தலைமறைவாக உள்ள நான்கு நபர்களைத் தேடி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.

மங்கலம் போலீஸார் இன்று (நவ. 09) கூறுகையில், "முதல் கட்டமாக வில்லியனூர் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கன்னியப்பன், ராஜ்குமார், பசுபதி, ஐய்யனார், சிவா, மூர்த்தி ஆகிய ஆறு பேரைத் தனிப்படை போலீஸார் இன்று பிடித்துள்ளோம். அவர்களுக்குக் கரோனா இருக்கிறதா என்பதை அறிய, பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளோம்.

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்துதல், சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பது, குழந்தைகளைச் சித்திரவதை செய்தது என போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT