க்ரைம்

வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

ஆனைமலை: வால்பாறை மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி பகுதியை சேர்ந்த 13 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் வால்பாறைக்கு வேனில் சுற்றுலா வந்தனர். திண்டுக்கல் என்ஜிஓ காலனியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வால்பாறையில் இருந்து திண்டுக்கல் புறப்பட்டனர். அட்டக்கட்டி அருகே வரும்போது வேன் பிரேக் சூடாகி பழுதடைந்து உள்ளதை அறிந்த மணிகண்டன், அட்டக்கட்டியில் வேனை நிறுத்தி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 25 பேரை அவ்வழியாக வந்த அரசு பேருந்தில் ஏற்றி அனுப்பி உள்ளார்.

சிறிது நேரம் கழித்து ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் சுற்றுலா பயணிகள் தினேஷ்(21), சுபாகர்(18), ஹரி(20), சந்தோஷ்(21), பார்த்தசாரதி (19) ஆகியோருடன் வேன் ஆழியாறு நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு 10.30 மணியளவில் கவியருவி அருகே வந்தபோது, வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு, சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 6 பேரும் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆழியாறு போலீஸார் மற்றும் வனத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆழியாறு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் மாற்று ஏற்பாடாக பேருந்தில் பயணித்ததால், விபத்தில் இருந்து தப்பினர்.

SCROLL FOR NEXT