க்ரைம்

சமையலரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு: 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூர் அருகேயுள்ள குட்டகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைக்கவுண்டம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பணியிட மாறுதலில் வந்த அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாளை, 2018-ம் ஆண்டு ஊரில் இருந்த சிலர் சமைக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். இதையடுத்து பெண் சமையலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பாப்பாள் அளித்த வன்கொடுமை புகார் தொடர்பாக சேவூர் போலீஸார் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த அன்றைய வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்டார்.

மேலும், 4 பேர் இறந்துவிட்டனர். 31 பேர் மீது வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பாப்பாள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆ.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி எம்.சுரேஷ் நேற்று தீர்ப்பு வழங்கினார். வழக்கில் இருந்து 25 பேர் விடுவிக்கப்பட்டனர். பழனிசாமி (68), சக்திவேல் (49), சண்முகம் (47), வெள்ளியங்கிரி (58), துரைசாமி (64), சீதாலட்சுமி(45) ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.15,500 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT