பெங்களூரு: கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி நகர பாஜக இளைஞர் அணி தலைவர் வெங்கடேஷ் குருபரா (35). இவர் கடந்த ஆண்டு அக்டோபரில் கங்காவதி அருகே 6 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கங்காவதி போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த ரவி (29), மைலாரி (32) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் 6 பேருக்கு எதிராக 925 பக்க குற்றப்பத்திரிகையை கொப்பல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சாதனந்த நாகப்பா நேற்று தீர்ப்பளித்தார். அதில், ‘‘வெங்கடேஷ் குருபரா மீதான முன்பகை காரணமாக ரவி (29), மைலாரி (32), தன்ராஜ் (28), பஷீர் (26), சலீம் (30), கங்காதரா (32) ஆகிய 6 பேரும் திட்டமிட்டு கொலை செய்ததை அரசு தரப்பில் தக்க ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர். எனவே, 6 பேருக்கும் தூக்கு தண்டனையும், தலா ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை வெங்கடேஷ் குருபராவின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.