திருப்பூரில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர்.
திருப்பூர்: தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, திருப்பூரில் பதுங்கியிருந்த 6 வங்கதேசத்தினரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், பாதுகாப்பு படையினரை அச்சுறுத்தும் வகையிலும் டெல்லியில் சமீபத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதை ஒட்டியவருக்கும், திருப்பூரில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் சில நாட்களுக்கு முன்னர் திருப்பூர் வந்தனர்.
தொடர்ந்து, அம்மாபாளையம், பல்லடம், ஊத்துக்குளியில் தங்கியிருந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த மிஜனுார் ரகுமான் (33), முகமது சாபேட் (35), உமர்(32), முகமது லிட்டன்(40), முகமது ஜாகீத்(40), முகமது உஜால்(29) என்பதும், பாதுகாப்புப் படைக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவருடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.3-ல் அவர்களை ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் சென்னை சென்று, அங்கிருந்து அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து திருப்பூர் போலீஸார் கூறும்போது, “டெல்லியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் காஷ்மீரை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, ஹிஸ்புல் முஜாஹதீன் அமைப்பைச் சேர்ந்தவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன. பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலரின் உத்தரவின்பேரில் போஸ்டர்களை ஒட்டியது தெரிந்தது. போஸ்டர் ஒட்டிய நபர்களுக்கும், திருப்பூரில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தை சேர்ந்த 6 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், போலியான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை டெல்லி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்" என்றனர்.