கைதான இருவர்.

 
க்ரைம்

விநாயகர் சிலைக்கு அணிவித்த ரூ.10,000 பண மாலை திருட்டு - சென்னையில் 6 பேர் கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: விநாயகர் சிலைக்கு அணிவித்த 10 ஆயிரம் ரூபாய் பண மாலையை திருடிச் சென்றதாக 4 இளஞ்சிறார்கள் உட்பட 6 பேரை ஆர்.கே.நகர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (33). இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உரிய அனுமதி பெற்று தனது வீட்டின் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். அதன்படி, கடந்த 13-ம் தேதி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி விநாயகர் சிலைக்கு 100 ரூபாய் நோட்டுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பண மாலையை அணிவித்தார். பின்னர் இரவு வரை விநாயகர் சிலை அருகில் இருந்த விக்னேஷ்வரன், அதன்பிறகு வீட்டுக்கு சென்றார். மறுநாள் 16-ம் தேதி அதிகாலையில் விநாயகர் சிலையை பார்த்தபோது, சிலைக்கு அணிவித்திருந்த ரூ.10 ஆயிரம் பண மாலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர், திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, பணத்தை மீட்டு நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில், திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்த ரூபன் (20), பட்டேல் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (19) ஆகிய 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதாக 16 மற்றும் 17 வயதுடைய மேலும் 4 சிறுவர்களையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT