சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி, ரூ.60 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
காரைக்குடி பாரிநகர் அதியமான் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் பூமாலை (54). கொடுக்கல் வாங்கல் தொழில் செய்கிறார். இவரது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது குடும்பத்தினருடன் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த நெப்போலியன், அவரது தங்கை நான்சி நெருங்கிப் பழகி வந்துள்ளார். இவர்கள் தாங்கள் இருவரும் பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாகவும், தாங்கள் பணிபுரியும் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதாகவும் பூமாலையிடம் கூறியுள்ளனர்.
இதை நம்பி பூமாலை குடும்பத்தினர் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் 2016-ம் ஆண்டு ரூ.60 லட்சம் கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யாதோடு, பணத்தையும் தரவில்லை.
மேலும் பணத்தைக் கேட்கச் சென்ற பூமாலையையும், அவரது நண்பர்களையும் நெப்போலியன் குடும்பத்தினர் அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து நெப்போலியன், நான்சி, அவர்களது தந்தை அருளாந்துசாமி, தாயார் புஷ்பா, ஆகிய 4 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.