க்ரைம்

நெல்லையில் கிறிஸ்தவ கல்லறைகளை சேதப்படுத்திய 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

அ.அருள்தாசன்

திருநெல்வேலியில் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்திலிருந்த கல்லறைகளை சேதப்படுத்தியது தொடர்பாக 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி தச்சநல்லூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உடையார்பட்டி கிறிஸ்தவ ஆலையத்துக்கு பாத்தியப்பட்ட கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைந்துள்ளது.

இந்த கல்லறை தோட்டத்துக்குள் கடந்த 18-ம் தேதி புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த கல்லறை தோட்டங்களையும், சுற்றுச்சுவரையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்தும், கல்லறைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கல்லறைகளை சேதப்படுத்தியது தொடர்பாக, தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த உடையார், முருகானந்தம், சங்கர், சபரி ராஜன் என்ற அய்யப்பன்,சேர்மன்துரை, கந்தன் ,ராதாகிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் மற்றும் மக்களின் பொது அமைதிக்கு குந்தகம் நேரிடும் என்பதனால், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தடுப்பு காவலில் வைப்பதற்கான ஆணையை தச்சநல்லூர் போலீஸார் நேற்று வழங்கினர்.

SCROLL FOR NEXT