பாளையங்கோட்டையில் வழக்கறிஞர் பிரம்மா (43) மீது தாக்குதல் நடத்திய மதுரம் ஹோட்டல் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, நுகர்வோர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை நடத்தி வருகிறார். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்று வருகிறார். பல்வேறு பொதுநலப் பிரச்சினைகளில் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியிலுள்ள மதுரம் ஹோட்டல் கிளைக்கு நேற்று இரவில் தனது நண்பருடன் பிரம்மா சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஹோட்டல் உரிமையாளரும், ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேரும், ''நீ தானே எங்கள் ஹோட்டலுக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாய், அரசு அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரங்களைக் கேட்டாய்?'' என்று கூறி பிரம்மா முகத்தில் வெந்நீரை ஊற்றியுள்ளனர்.
அதில் நிலைகுலைந்த அவரைத் தாக்கியுள்ளனர். இதை அங்கிருந்த பிரம்மாவின் நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகப் பரவியது. ஹோட்டலின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு பிரம்மாவைத் தாக்குவதும், அவர் எழும்போது மிதிப்பதும், கன்னத்தில் அறைவதுமான காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.
இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் பாளையங்கோட்டை போலீஸார் அங்கு சென்று பிரம்மாவை மீட்டனர். பலத்த காயமடைந்த பிரம்மா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சூரியநாராயணன் தலைமையில் வழக்கறிஞர்கள் ஹோட்டலை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாகப் பாளையங்கோட்டை போலீஸில் பிரம்மா அளித்த புகாரின்பேரில் ஹோட்டல் மதுரம் உரிமையாளர் ஹரிஹரன் (45), அவரது சகோதரர் மணிசங்கர் (42), ஊழியர்கள் பேட்டை பொன்னரசு (36), பானாங்குளம் முத்துராஜ் (32), ஆலடியூர் மாரியப்பன் (41) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் 10 பேர் தேடப்படுகிறார்கள். இதனிடையே ஹோட்டல் உரிமையாளர்கள் தரப்பிலும் வழக்கறிஞர் பிரம்மா மீதும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.