க்ரைம்

ஐஎம்இஐ எண்களை மாற்றி வெளி மாநிலங்களில் வழிப்பறி செல்போன்கள் விற்பனை: இடைத்தரகர்கள் உட்பட 9 பேர் கைது

செய்திப்பிரிவு

பொதுமக்களிடம் வழிப்பறி செய்யப்படும் செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை மாற்றி, வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்த இடைத்தரகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் வழிப்பறி செய்யப்படும் செல்போன்கள் மூர்மார்க்கெட், பர்மா பஜார், பாரிமுனை ஆகிய பகுதிகளில் விற்கப்படுவதை போலீஸார் கண்டுபிடித்தனர். செல்போனின் ஐஎம்இஐ எண்களை மாற்றி, புதிய செல்போன்கள் போலவே அவற்றை மாற்றம் செய்து, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஒரு கும்பல் விற்று வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, மூர் மார்க்கெட், பர்மா பஜார், பாரிமுனை பகுதிகளில் உள்ள செல்போன் கடைகளுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அவர்களது இருசக்கர வாகன எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில், தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருது (49) என்ற இடைத்தரகர் சிக்கினார். செல்போன் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து செல் போன்களை ரூ.500 முதல் ரூ.2,000-க்குவாங்கும் இவர், அதைரூ.2,500 முதல் ரூ.3,000-க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின்பேரில், திருட்டு செல்போன்கள் விற்கும் இடைத்தரகர்களான மண்ணடி அந்தோணிசாமி, புகழேந்தி, வியாசர்பாடி சந்துரு ஆகிய 3 பேர், பர்மா பஜாரில் திருட்டு செல்போன்களை வாங்கிவிற்கும் எம்கேபி நகர் பாலமுருகன், சுரேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மக்களிடம் வழிப்பறி செய்யும் செல்போன்களை, அந்த கடைக்காரர்களுக்கு கொடுத்துவந்த ராயபுரம் பிரவீன், கோயம்பேடு பரத் (20), திருச்சி விக்னேஷ் பிரபு (37) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

50 சென்போன்கள் பறிமுதல்

பர்மா பஜாரில் பொதுவாக காலை 10 மணிக்கு பிறகுதான் செல்போன் கடைகள் திறக்கப்படும். ஆனால், திருட்டு செல்போன் விற்பவர்கள் மட்டும் அதிகாலையே கடையை திறந்து, விற்பனை செய்துவந்துள்ளனர். இடைத்தரகர்கள் மூலம் செல்போன்களை வாங்கி ஐஎம்இஐ எண்களை மாற்றி புதியசெல்போன்கள்போல விற்று வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

செல்போன் கொள்ளை கும்பலிடம் இருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள், ரூ.60 ஆயிரம் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட 9 பேரையும் செல்போன் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ள காவல் நிலையங்களில் தனிப்படை போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT