க்ரைம்

திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் கடந்த மார்ச் 19-ம் தேதி, அப்பகுதியை சேர்ந்த 3 பேரை திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 ஏர்கன், ஒரு ரிவால்வர், 2 பெல்ட் ரிவால்வர் என 8 துப்பாக்கிகள் மற்றும் 67 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஆயுத பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த ஆக.18-ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக துப்பாக்கிகளை சரிபார்த்தபோது, 2 துப்பாக்கிகளை காணவில்லை. இதையடுத்து, அவற்றை திருடியதாக அதே காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றும் கடலூர் மாவட்டம் முட்லூரைச் சேர்ந்த தீபக்(26), அவருக்கு உதவிய, நண்பரான அதே ஊரைச் சேர்ந்த வாசுதேவன்(23) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தீபக் துப்பாக்கிகள் மீது அதிக ஆசை கொண்டவர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளில் இரண்டை திருடிகொண்டு ஊருக்குச் சென்ற அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்கு வந்தார்.

துப்பாக்கிகள் குறித்து விசாரணை நடப்பதை அறிந்து, தன் வீட்டில் இருந்த துப்பாக்கிகளை, காவல் நிலையத்துக்கு பின்னால் வீசிவிடுமாறு நண்பர் வாசுதேவனிடம் கூறினார். வாசுதேவன், துப்பாக்திகளை வீசிச் சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. வாசுதேவனை பிடித்து விசாரித்ததில் துப்பாக்கிகளை தீபக் திருடியது தெரியவந்தது என்றனர்.

SCROLL FOR NEXT