க்ரைம்

மர்மநபர்கள் தன்னை கடத்திவிட்டதாக தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய சிறுவன்: எச்சரித்து அனுப்பி வைத்த போலீஸார்

செய்திப்பிரிவு

மர்ம நபர்கள் தன்னை கடத்தி விட்டதாகக் கூறி, தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு கதறி அழுது நாடகமாடிய சிறுவனை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் டொளா ராம். இவர் அதே பகுதியில் இருச்சக்கர வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது 14 வயது மகன் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை டியூசன் சென்ற குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இரவு 8.30 மணியளவில் தனது போனில் இருந்து தந்தைக்கு போன் செய்த குமார், தன்னை மர்ம நபர்கள் சிலர் ரூ.10 லட்சம் கேட்டு காரில் கடத்தி சென்று விட்டதாகவும், உடனே பணத்தை கொண்டு வாருங்கள் என்று கூறி கதறி அழுதவாறு இணைப்பை துண்டித்துவிட்டார்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராம் ஜாம்பஜார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீஸார் சிறுவனின் செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து தேடினர். அப்போது, சேப்பாக்கம் அருகே இருப்பதாக செல்போன் சிக்னல் கிடைத்தது.

சிசிடிவி கேமரா ஆய்வு

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தனிப்படை போலீஸார் விரைந்து சென்றபோது சாலையோரம் சிறுவன் குமார் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, சிறுவன் ஆட்டோ மூலம் சென்றது தெரியவந்தது. தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், அந்தச் சிறுவன் இணையதளம் மூலம் வாடகை ஆட்டோவை முன்பதிவு செய்து நண்பருடன் சென்றது தெரியவந்தது.

இதன்பிறகு போலீஸார் சிறுவனிடம் விசாரணை நடத்தியதில், செலவுக்கு தனது தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு போன் செய்ததாக ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீஸார் சிறுவனை எச்சரித்து தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT