கரூர் மாவட்டம் சேர்வைக்காரனூரில் தோட்ட வீடு ஒன்றில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள். 
க்ரைம்

தரகம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.16 லட்சம் மதிப்புடைய 1.5 டன் குட்கா,வெடிகள் பறிமுதல்; தந்தை, மகன் கைது

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே தோட்ட வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.16 லட்சம் மதிப்புடைய 1.5 டன் எடையுள்ள குட்கா பொருட்கள், தோரண- வாண வெடிகளை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக தந்தை, மகன் ஆகியோரை கைது செய்தனர்.

சேர்வைக்காரனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(55). இவர், தரகம்பட்டியில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வருவதுடன், திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் தோரண வெடிகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

இவரது தோட்ட வீட்டில் குட்கா, வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சியைச் சேர்ந்த திட்டமிடப்பட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு(ஓசிஐயு) போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஓசிஐயு காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சேர்வைக்காரனூரில் உள்ள சுப்பிரமணியனின் தோட்டத்து வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 33 சாக்குப் பைகளில் இருந்த 1.5 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், 300 தோரண வெடிகள், 200 வாண வெடிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, தரகம்பட்டியில் உள்ள குழந்தைவேல் என்பவரின் வெற்றிலைக் கடையில் 2 மூட்டைகளில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓஐசியு போலீஸார் அளித்த தகவலின்பேரில், சுப்பிரமணி, அவரது மகன் லோகேஷ்(29) ஆகியோரை சிந்தாமணிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT