திரைப்படம் தயாரிக்க பண உதவி செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை மோசடி செய்ததாக போலி பட தயாரிப்பு நிறுவன உரிமையாளரை நீலாங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பாலவாக்கம், செங்கேணியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஷனாஸ் பேகம். இவருக்கு விழுப்புரம் மாவட்டம், கோட்ட குப்பத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் என்ற ரவிக்குமார் அறிமுகமானார். அவர், திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், புதுப் படத்துக்கு பண உதவி செய்தால் பின்னர் இரட்டிப்பாக்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய ஷனாஸ்பேகம் தன்னிடமிருந்த 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.7 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால், பேசியபடி ரவிக்குமார் படம் தயாரிக்காமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து ஷனாஸ் பேகம் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், ரவிக்குமார் திரைப்படம் தயாரிப்பதாகக் கூறி போலி தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து 15-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் ரூ.40 லட்சம் வரை வசூல் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.